அரசு பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது


அரசு பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
x

அரசு பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு பஸ், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மாணவர்கள் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அரசு டவுன் பஸ்

திருச்சிைய அடுத்த திருவெறும்பூரில் இருந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு டவுன் பஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பஸ் இந்தளூர், கடம்பங்குடி, மேகளத்தூர், ஒரத்தூர், ஆற்காடு, முல்லை குடி வழியாக திருக்காட்டுப்பள்ளி சென்று விட்டு மீண்டும் திருவெறும்பூர் சென்றடையும்.

நேற்று காலை வழக்கம்போல் திருவெறும்பூரில் இருந்து இந்த பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் நாராயணன் ஓட்டி வந்தார். ரெங்கராஜ் கண்டக்டராக பணியாற்றினார்.

சாலையோரத்தில் கவிழ்ந்தது

இந்த பஸ் ஒரத்தூரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆற்காடு கிராமத்திற்குள் நுழைந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பெண்கள், பயணிகள், மாணவ, மாணவிகள் கூக்குரலிட்டனர்.

அப்போது அந்த பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த கிராமத்தினர் வந்து பஸ்சில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காலை நேரமாக இருந்ததால் இந்த பஸ்ஸில் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், அருகில் உள்ள ஊர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்பவர்கள் என கூட்டம் அதிகமாக இருந்தது.

மாணவர்கள் உள்பட 30 பேர் காயம்

இந்த விபத்தில் திருக்காட்டுப்பள்ளி தனியார் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் அனு ஸ்ரீ, ஜனனி, சுபஸ்ரீ, மாணவர்கள் நரேன், எடிசன், அபிஷேக் மற்றும் வேப்பங்குடி கடல் மணி(வயது 50), திருவெறும்பூர் சுரேஷ் குமார்(52), சுப்ரா பேகம்(50), திருக்காட்டுப்பள்ளி கனிலா(51) உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) பழனிவேல், பூதலூர் தாசில்தார் பெர்ஷியா ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டு காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்களை கேட்டுக்கொண்டனர்.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம் பூதலூர் ஆஸ்பத்திரியில் முகாமிட்டு சிகிச்சை ஏற்பாடுகளை கவனித்தார்.


Related Tags :
Next Story