'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது
ஊரின் பெருமையை எடுத்து சொல்லவே ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா கூறினார்.
ஊரின் பெருமையை எடுத்து சொல்லவே 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது என ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ஸ்ரீலேகா கூறினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் மகளிர் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற 'நம்ம ஊரு சூப்பரு' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி தூய்மை பணிகள் நடந்தது.
முன்னதாக தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தொடங்கி வைத்தார். இதேபோல் இலவங்கார்குடி ஊராட்சியில் தூய்மைப்பணி, மரக்கன்று நடும் பணி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுகாதாரமான வாழ்வியல்
தூய்மை மற்றும் சுகாதாரமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுதலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், சுத்தம், சுகாதார முறைகளை பின்பற்றுதல், மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது ஊரின் பெருமை
நமது ஊரின் பெருமையை எடுத்து சொல்லவே 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், மகளிர்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.