சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்


சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்
x

வனப்பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

வனப்பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம சபை கூட்டம்

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சி மண்வயல் நூலகம் முன்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கினார். செயலர் சோனி சஜீ வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. இதற்காக சில இடங்களில் மின் இணைப்புகள் வழங்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. எனவே மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதற்கிடையே வனப்பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தூரம் நிரந்தர கட்டிடங்கள் கட்ட தடை விதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை பதாகைகளுடன் கலந்துகொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். நீலகிரியில் பட்டா வழங்குவதற்கு தடையாக உள்ள ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஊராட்சி மக்கள் வலியுறுத்தினர். இதை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கைவிட வேண்டும்

முதுமலை ஊராட்சி குனில் சமுதாய கூடத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனத்தின் கரையோரம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் மசினகுடி ஊராட்சி கிராம சபை கூட்டம் மாவனல்லா சமுதாயக்கூடத்தில் ஊராட்சி தலைவர் மகாதேவி மோகன் தலைமையில் நடைபெற்றது.

துணை தலைவர் நாகேஷ், செயலர் கிரண் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் வன உரிமை சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். முதுமலை தெப்பக்காடு பாலத்தை விரைவாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோத்தகிரி

கோடநாடு ஊராட்சியில் தலைவர் சுப்பிகாரி, நடுஹட்டி ஊராட்சியில் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன், தேனாடு ஊராட்சியில் தலைவர் ஆல்வின், கொணவக்கரை ஊராட்சியில் தலைவர் ஜெயபிரியா ஹரிகரன், ஜக்கனாரை ஊராட்சியில் தலைவர் சுமதி சுரேஷ், குஞ்சப்பனை ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன், கெங்கரை ஊராட்சியில் தலைவர் முருகன், நெடுகுளா ஊராட்சியில் தலைவர் சுகுணா சிவா ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.


Next Story