அரசு விடுதியை விரைந்து கட்ட வேண்டும்


அரசு விடுதியை விரைந்து கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 11:48 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பில் அரசு விடுதியை விரைந்து கட்ட வேண்டும் என்று ஆதிதிராவிட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அரசு உதவி பெறும் பள்ளியில் கடலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக சந்தைதோப்பு பகுதியில் அரசு ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி செயல்பட்டு வந்தது. கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்கி படிப்பதற்காக அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி சந்தை தோப்பு பகுதியில் இயங்கி வந்தது. மிகவும் பழமையான இந்த கட்டிடம் சேதம் அடைந்து காணப்பட்டதால் இதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, வாடகை வீட்டில் போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம். பழைய விடுதி கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தருவதாக ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கூறினா். ஆனால் 6 மாதங்கள் கடந்த பின்னரும் இன்னும் புதிய விடுதி கட்டுவதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. கட்டுமான பணி இப்போது தொடங்கினாலும் அது முடிவடைய சுமார் 6 மாத காலங்கள் ஆகிவிடும். எனவே எங்களின் மன வேதனையை உணர்ந்து இந்த கல்வி ஆண்டிலேயே புதிய விடுதியை கட்டித்தர வேண்டும் என்றனர்.


Next Story