கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
கூத்தாநல்லூர்:
மன்னார்குடியில் இருந்து சித்தாம்பூர் வழியாக கொரடாச்சேரிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிறுத்தம்
மன்னார்குடியில் இருந்து சித்தாம்பூர் வழியாக கொரடாச்சோிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் நாலாநல்லூர், குடிதாங்கிச்சேரி வடக்கு தெரு, சித்தாம்பூர், கோட்டகம், சிவபுரம், கீழ்பாதி, விழல்கோட்டகம், வெள்ளக்குடி, வாழச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து கொரடாச்சேரி, மன்னார்குடி, சவளக்காரன், பொதக்குடி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்தநிலையில் சாலை சரியில்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக சிரமம் அடைந்து வருகின்றனர்.
பஸ் இயக்க வேண்டும்
தற்போது மேற்கண்ட வழித்தடத்தில் சாலை சீரமைக்கப்பட்டு, புதிய தார்சாலை போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மன்னார்குடியில் இருந்து சித்தாம்பூர் வழியாக கொரடாச்சேரிக்கு மீண்டும் இயக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.