போதைப்பொருளை தடுக்க முனைப்பு காட்டும் அரசு, மது விற்பனையை நிறுத்த வேண்டும்- சரத்குமார்


போதைப்பொருளை தடுக்க முனைப்பு காட்டும் அரசு, மது விற்பனையை நிறுத்த வேண்டும்- சரத்குமார்
x

போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு முனைப்பு காட்டுவதுபோல் மது விற்பனையையும் நிறுத்த வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி செயலாளர், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் காலை நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் குறைந்து விடும்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி தொடர்பாக எங்களின் முடிவை தெரிவிப்போம். இன்றைக்கு தேர்தலுக்கு அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டியிருப்பதால், அதற்கு ஈடுகொடுக்க நம்மால் முடியாது என்று சாதாரண தொண்டர்கள் ஒதுங்குகிறார்கள். தேர்தலில் அதிக பணம் செலவழித்து வெற்றி பெறுவது உண்மையான ஜனநாயகம் கிடையாது.

தனித்து போட்டி

நாம் தயங்கும்போது தான் கூட்டணிக்கு செல்ல நேரிடுகிறது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் தனித்து போட்டியிடுவோம்.

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிப்பதால் மட்டுமே சமூகம் கெட்டுப்போகவில்லை. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் கிரிக்கெட் போன்றவை தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் இருக்கிறது. ஆன் லைன் சூதாட்டத்தை அரசு தடை செய்தால், நான் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.

மது விற்பனையை தடைசெய்ய வேண்டும்

போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டுவதுபோல், மது விற்பனையையும் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் முன்னணி கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் நிர்வாகிகள் அடித்துக்கொள்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஒற்றுமை இல்லை என்றால் எதிர்காலம் இல்லை.

தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்கார்ந்து விரைந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். நடிகர் விஜயகாந்த் நல்ல நண்பர். அவரை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். அவருக்கு பாராட்டு விழா எடுப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் முதல்-அமைச்சர் வாழ்த்து கூற வேண்டும் என்பது என் கருத்து.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

தீர்மானங்கள்

தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

மின்சார சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தொடர்ந்தால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும். காவிரி-குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். ரெயில் டிக்கெட்டை ரத்துசெய்ய ஜி.எஸ்.டி. விதித்து இருப்பதை ரத்து செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாநில பொருளாளர் சுந்தரேசன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் சுந்தர், ஈஸ்வரன், மகாலிங்கம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story