தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்
தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
நிதி நெருக்கடி
வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அதுவரையில் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி.,வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், கீரைசாத்து ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி சதாசிவம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னை ரமேஷ், கொல்லப்பள்ளி நிர்மலாசைமன், எஸ்.என். பாளையம் சித்ரா சிவாஜி, பாலகுப்பம் அம்பிகா சிவகுமார், எருக்கம்பட்டு கோமதிசுதாகர், பெருமாள் குப்பம் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் செய்கிறார்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற்போதாவது மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப்பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.