ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்த வேண்டும்
கொள்ளிடம் முதல் தோப்புத்தெரு வரை ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ள சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் முதல் தோப்புத்தெரு வரை ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ள சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லிகற்கள் பெயர்ந்து...
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து கொள்ளிடம் ரெயில் நிலையம் அருகே தோப்புத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு சொந்தமான சேவை மைய கட்டிடத்திற்கு செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால் சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாகவும், ஜல்லிகள் பெயர்ந்தும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தார்ச்சாலை
சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பொருட்கள் ஏற்றி செல்லும் போது சிரமம் அடைந்து வருகின்றனர். சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஜல்லிகளில் தடுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடையாக நடந்து செல்லும் ஆண்,பெண் முதியவர்கள் இரவு மற்றும் பகல் ஆகிய இரு வேளைகளிலும் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.
எனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மேம்படுத்தப்படாமல் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து காட்சியளிக்கும் கொள்ளிடம் தொப்புத்தெரு இடையேயான சாலையை தார்ச்சாலையை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.