ஓடும் ரெயிலில் ஏற முயற்சித்து கீழே விழுந்த வாலிபர்..!லாவகமாக மீட்டு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர்..!
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏற முயற்சித்து கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கோவை நோக்கி 11-வது நடைமேடையில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
அந்த நேரத்தில் பயணி ஒருவர் நடைமேடையில் ஓடியபடி ரெயிலில் ஏற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பயணி தண்டாவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடையே தவறி கீழே விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை போலீஸ் ராம் கிஷன் மீனா, பயணி விழுவதை கவனித்தார்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட அவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை தண்டவாளத்தில் சிக்கி கொள்ளாத படி லாவகமாக இழுத்து மீட்டார். தனது உயிரை மீட்ட போலீஸ்காரருக்கு பயணி தனது நன்றியை தெரிவித்தார்.
பின்னர் விசாரணையில், பயணி கோவையை சேர்ந்த பூவரசன் (வயது 22) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் பயணியை காப்பாற்றிய போலீஸ்காரரை பாராட்டினர்.