கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை - தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு


கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை - தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு
x
தினத்தந்தி 27 Jun 2022 10:25 PM IST (Updated: 1 July 2022 4:21 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது

சென்னை,

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடுமையான வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அதன்படி அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை வகித்தார். எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓ பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்து அவரை கட்சியில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டநிலையில், கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு (எடப்பாடி பழனிசாமி) அதிகாரம் இல்லை என்று மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு அளித்துள்ளார்.

"கடந்த பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்பட்டது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை அலுவலகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story