சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து மக்கள் கட்சியினர்
திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் மிகவும் பழமையான பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சாமி சிலைகள் கடந்த 2 நூற்றாண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் சாமி சிலைகள், வழிபாடுகள் இல்லாத கோவிலாக இருக்கிறது. எனினும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர்.
மேலும் கோவிலில் மீண்டும் சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று பக்தர்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவிலில் சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும், சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு வத்தலக்குண்டுவில் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை இந்து மக்கள் கட்சியினர் திடீரென அறிவித்தனர்.
உண்ணாவிரதம்
இதை தொடர்ந்து திண்டுக்கல் பஸ்நிலையத்தை அடுத்துள்ள கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். பின்னர் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் இளைஞர் அணி துணை தலைவர் மோகன்குமார், மாவட்ட அமைப்பாளர் ரமேஷ்பாண்டியன், சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி உள்ளிட்டோர் பஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அதையடுத்து பஸ் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் வைத்துள்ள விநாயகர் சிலை அருகே அமர்ந்து அபிராமி அம்மன் படத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து அபிராமி அம்மன் படத்தை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.