தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் குட்டை தண்ணீரில் இறங்கி போராட்டம்
காலமுறை ஊதியம் வழங்க கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் குட்டை தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
காலமுறை ஊதியம் வழங்க கோரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் குட்டை தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலமுறை ஊதியம்
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டக்கலைத்துறையினர் தினக்கூலியாக 5 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
தண்ணீரில் இறங்கி போராட்டம்
இந்தநிலையில் 7-வது நாளான நேற்று தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தாவரவியல் பூங்கா குட்டை தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக குட்டையில் இறங்கியவர்களையும், இறங்க முயன்றவர்களையும் மீட்டு, புல்வெளி பகுதிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யாரும் குட்டையில் இறங்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.