விடுதியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


விடுதியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:07+05:30)

விழுப்புரத்தில் பணிபுரியும் மகளிர்களுக்கான விடுதியில் நடக்கும் புனரமைக்கும் பணியை முடித்து விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் மோகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

கலெக்டர் ஆய்வு

தமிழக முதல்-அமைச்சர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்ற மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி பணிபுரியும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிருக்காக கட்டப்பட்டுள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதியை புனரமைத்து குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி ரூ.45 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை ஆய்வு செய்த கலெக்டர் மோகன் விடுதி புனரமைப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைந்த கட்டணத்தில் அறைகள்

பின்னர் அவர் கூறும்போது, இந்த விடுதியில் 50 பேர் தங்கும் அளவில் 22 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது இவ்விடுதி கட்டிடத்தில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டும் விடுதி முழுவதும் வர்ணம் பூசுதல், புதியதாக குடிநீர் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு மாவட்டத்தில் பணிபுரியும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் விடுதி அறைகள் வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி இ.எஸ்.கார்டன் பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி குட்டையாக சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட கலெக்டர் மோகன், கழிவுநீரை உடனடியாக வெளியேற்றும்படியும், கால்வாய் அமைத்து வருங்காலங்களில் கழிவுநீர் தேங்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story