ஜாக்கிகள் மூலம் தூக்கி 3 அடி உயர்த்தப்பட்ட வீடு
சத்திரப்பட்டியில், ஜாக்கிகள் மூலம் தூக்கி 3 அடி உயரத்துக்கு வீடு உயர்த்தப்பட்டது
பள்ளத்தில் வீடு
சத்திரப்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவருக்கு சொந்தமான 850 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடு அப்பகுதியில் உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீடு கட்டப்பட்டதாகும்.
சமீபத்தில் அந்த பகுதியில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதனால் தரை உயர்ந்து, வீடு பள்ளமாகி விட்டது. இதன் காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சச்சிதானந்தம், தனது வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்த முடிவு செய்தார். இதற்காக, 'ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி' என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
அதன்படி அந்த நிறுவனத்தினர், நேற்று முதல் வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தும் பணியை தொடங்கினர். இந்த பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 170 ஜாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
3 அடி உயரம்
தரையில் இருந்து சுவரை அறுத்து ஒவ்வொரு பகுதியாக ஜாக்கி பொருத்தப்பட்டது. அதன்படி 3 அடி வரை ஜாக்கிகள் மூலம் தூக்கப்பட்டது. இதற்கிடையே வீட்டை தூக்கும் தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் கட்டிட தொழில்நுட்ப பொறியாளர் சந்திரசேகர் கூறுகையில், வீடுகளின் அஸ்திவாரத்தை உயர்த்துவதற்கு 'ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி' எனும் தொழில்நுட்பம் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சச்சிதானந்தத்தின் வீட்டை ஜாக்கிகளை பயன்படுத்தி, ஒவ்வொரு அடியாக உயர்த்தி 3 அடி வரை தூக்கி உயர்த்தப்பட உள்ளது. இந்த பணி இன்னும் 3 வாரங்களில் நிறைவு பெறும். இதற்கு, ரூ.7 லட்சம் வசூலிக்கப்படும் என்றார்.