வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது
கறம்பக்குடி பகுதியில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் தொழிலாளியின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இருப்பிடமின்றி தவிக்கும் தொழிலாளி குடும்பத் திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டை சுற்றி மழைநீர் தேங்கியது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை கட்ட இடம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள அரங்குளன் மஞ்சுவயல் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சிவக்குமார் என்பவரது ஓட்டு வீட்டை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வீட்டின் சுவர்கள் ஈரத்துடன் நீர் பூத்து இருந்தது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்நிலையில் நேற்று இரவு சிவக்குமார், அவரது மனைவி சீதா, மகன் திருமேனிநாதன் ஆகியோர் வீட்டில் தூக்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை ஓடு உடைந்து கீழே விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வீட்டின் சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்தது. மேற்கூரை ஓடுகளும் கீழே விழுந்து உடைந்தன. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது.
நிவாரணம் வழங்க கோரிக்கை
முன்னரே வீட்டில் இருந்து வெளியேறியதால் சிவக்குமார் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டை இழந்ததால் இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே சிவக்குமார் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.