கணவன்-மனைவி மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு
கணவன்-மனைவி மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு
கும்பகோணம்,
பூர்வீக சொத்தை மீட்டுத்தரக்கோரி கணவன்- மனைவி மண்எண்ணெய் கேனுடன் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூர்வீக சொத்து
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கும்பகோணம் அருகே அத்திக்கோட்டை கிராமத்தில் உள்ள சித்ராவின் தந்தை கிருஷ்ணனின் பூர்வீக சொத்தான 3 ஏக்கர் நிலத்தை அவரது உறவினர்கள் வைத்துக்கொண்டு சித்ராவுக்கு உரிய பங்கை தர மறுத்துள்ளனர். இதுகுறித்து கணவன்-மனைவி ஆகியோர் தங்களுக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்தை பெற்றுத்தர வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மண்எண்ணெய் கேனுடன்
நேற்று காலை கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த கணவன்-மனைவி இருவரும் பூர்விக சொத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காத அதகாரிகளையும் கண்டித்தும், சொத்தை மீட்டுதரக்்கோரியும் தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிப்பதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் தம்பதியை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோட்டாட்சியர் லதாவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இதுகுறித்து இன்று(செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.