கணவன்-மனைவியை கட்டிப்போட்டு தங்க நகை-வௌ்ளி பொருட்கள் கொள்ளை


கணவன்-மனைவியை கட்டிப்போட்டு தங்க நகை-வௌ்ளி பொருட்கள் கொள்ளை
x

தஞ்சை அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு தங்க நகை- வெள்ளி பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தஞ்சாவூர்

வல்லம்:

தஞ்சை அருகே வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு தங்க நகை- வெள்ளி பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பால் வியாபாரி

தஞ்சையை அடுத்துள்ள மேலவெளி அருகே உள்ள விடுதலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 37). இவருடைய மனைவி சிவசங்கரி (வயது32). ஜெயராஜ் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயராஜ் மற்றும் அவருடைய மனைவி சிவசங்கரி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஜெயராஜின் வீட்டின் கதவை யாரோ தட்டியுள்ளனர். கதவை தட்டும் சத்தம் கேட்டு ஜெயராஜ் எழுந்து வந்து கதவை திறந்துள்ளார்.

தங்க நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

அப்போது வீட்டின் வெளியே முகமூடி அணிந்து நின்று கொண்டிருந்த 4 பேர், ஜெயராஜின் வீட்டிற்குள் புகுந்து சிவசங்கரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதனையடுத்து ஜெயராஜையும், சிவசங்கரியையும் சத்தம் போடாமல் இருக்க வீட்டில் இருந்த பெட்ஷீட்டை கிழித்து அவர்கள் 2 பேரையும் மர்ம நபர்கள் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் சிவசங்கரி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, தோடு என 4¾ பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த வெள்ளி அறுணா கொடி, வெள்ளி கொலுசு மற்றும் செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஜெயராஜ், சிவசங்கரி ஆகியோரை வீட்டின் உள்ளே வைத்து கதவை சாத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

ஜெயராஜ் அவருடைய வாயால் சிவசங்கரி கையில் கட்டப்பட்டிருந்த கட்டை கடித்து அவிழ்த்துள்ளார். இதை தொடர்ந்து சிவசங்கரி ஜெயராஜின் கையில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து விட்டுள்ளார். ஜெயராஜ் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார். இதுகுறித்து ஜெயராஜ் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கணவன்-மனைவியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story