மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்


மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர்
x

உவரியில் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர், தானும் தற்கொலைக்கு முயன்றார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரியில் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர், தானும் தற்கொலைக்கு முயன்றார்.

வயதான தம்பதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை (வயது 65). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் உவரி அந்தோணியார் ஆலயத்துக்கு வந்தனர்.

கழுத்தை அறுத்துக்கொலை

அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் அந்திரேயா ஆலயம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்தோணி பிச்சை காய்கறி வெட்டும் கத்தியால் தனது மனைவி ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அந்தோணி பிச்சை அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உவரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி பிச்சையை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மருமகள் கொடுமை காரணமாக அந்தோணி பிச்சை தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் உவரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story