உடற்பயிற்சி சாதனத்தால் மனைவி அடித்து கொலை - குடி போதையில் கணவன் வெறிச்செயல்
சிவகங்கை அருகே குடி போதையில் மனைவியை கொடூரமாக அடித்து கொன்ற கணவன் போலீசில் சரணைடைந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் மார்க் ஆண்டனி (வயது 43). இவர் கேரளாவில் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மார்க்ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பு சிவகங்கை வந்து உள்ளார். ஊரில் இருந்த இரண்டு நாட்களிலும் முழு போதையில் இருந்தது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் உடற்பயிற்சி செய்யும் தம்புல்ஸால் தலையில் அடித்து கொடூர கொலை செய்துவிட்டு நேராக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் மார்க் ஆண்டனி சரணடைந்தார்.
இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடி போதையில் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.