மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: நகைக்கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொன்ற போலீஸ் ஏட்டு - 7 பேர் அதிரடி கைது
மதுரையில் நகைக்கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவத்தில், போலீஸ் ஏட்டு உள்பட 7 பேர் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் நகைக்கடை அதிபரை கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவத்தில், போலீஸ் ஏட்டு உள்பட 7 பேர் நேற்று இரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நகைக்கடை அதிபர் கொலை
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவர் ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரம் மெயின்ரோடு பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இந்து மக்கள் கட்சி நிர்வாகியாகவும் இருந்தார்.
இந்த நிலையில். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல், அவரை வழிமறித்தது. பின்னர் அவரை சரமாரியாக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பிச்சென்றனர்.
உயிருக்கு போராடிய மணிகண்டன், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
6 பேர் சிக்கினர்
பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரித்தனர். இந்த படுகொலையில் ெதாடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன் பேரில் கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது, மணிகண்டனை கொலை செய்தவர்கள் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்தது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று சிலரை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசாரிடம், ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு நேதாஜி நகர் முதல் தெருவைச் சேர்ந்த அன்புராஜன் மகன் அய்யப்பன் (26), பாரதியார் ரோடு தேவர் நகர் முதல் தெரு கார்த்திக் (26), பாரதியார் ரோட்டை சேர்ந்த நாகேந்திரன் மகன் அழகுபாண்டி (26), அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் மணிகண்டன் (28), டி.வி.எஸ்.நகரை சேர்ந்த முத்துப்பாண்டி (24), வில்லாபுரத்தை சேர்ந்த ஹைதர்அலி (24) ஆகிய 6 பேர் சிக்கினர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதல் விவகாரம்
அப்போது திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் கோர்ட்டு ஏட்டுவாக வேலை பார்த்து வந்தவர், ஹரிஹரபாபு. இவருக்கு, நகைக்கடைக்காரர் மணிகண்டனுடன் அறிமுகம் இருந்து வந்தது. இந்த நிலையில் போலீஸ் ஏட்டு தனது 2-வது மனைவியை அழைத்து வந்து அவரது நகைக்கடையில் மோதிரம் வாங்கியுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும், மணிகண்டனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஏட்டுவின் மனைவி, சில நகைகள் செய்து தரும்படி ஆர்டர் கொடுத்துள்ளார்.
அந்த நகையை கொடுப்பதாக அடிக்கடி மணிகண்டன், ஏட்டுவின் வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஏட்டுவின் மனைவியுடனான தொடர்பு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ஏட்டு ஆத்திரம் அடைந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில், ஏட்டுவை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் ஏட்டுவுக்கும், நகைக்கடை அதிபரான மணிகண்டனுக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து மணிகண்டன் மீது ஏட்டு ஆத்திரத்தில் இருந்தார். எனவே தனக்கு தெரிந்த ரவுடிகள் மூலம் மணிகண்டனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
கூலிப்படையை ஏவி கொலை
இதற்காக ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ரவுடியிடம் ரூ.4 லட்சம் கொடுப்பதாக ஏட்டு பேசியுள்ளார். அதை தொடர்ந்து சம்பவத்தன்று அவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் மது குடிக்க பணம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கி கொண்டு அவர்கள் மது அருந்தி விட்டு வந்து மணிகண்டனை கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் மேலும் ஏட்டு ரூ.20 ஆயிரம் கொடுத்து கொடைக்கானலுக்கு தப்பி செல்லுமாறு கூறியுள்ளார். அவர்கள் மாட்டுத்தாவணிக்கு சென்று ஓட்டலில் சாப்பிடும் போதுதான் சிக்கினர் என்று மேற்கண்ட விவரங்களை போலீசார் தெரிவித்தனர். இது தவிர ஏட்டு, அந்த நகைக்கடையில் சீட்டு போட்டு இருந்ததாகவும், அதில் மணிகண்டன் ரூ.6 லட்சம் வரை கொடுக்க வேண்டி இருந்ததாகவும், அந்த பணத்தை தரமறுத்ததால் தான் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
இது குறித்து தனிப்படை போலீசார் ஏட்டு ஹரிஹரபாபுவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் தினேஷ் (27), ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெரு ஆனந்தகுமார் மகன் அஜித்குமார் (25) ஆகிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இவர்கள்தான் இந்த சம்பவத்துக்கு கூலிப்படையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பிடிபட்ட 6 பேர் மற்றும் ஏட்டு ஹரிஹரபாபு ஆகியோரை நேற்று இரவில் போலீசார் கைது செய்தனர்.