விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
உளுந்தூர்பேட்டையில் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை கார்னேஷன் தெருவை சேர்ந்தவர் பன்னீர் மகன் விஷ்வா (வயது 15). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நித்திஷ்(18) மற்றும் மணிமாறன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர்கள் மீது அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த விஷ்வா, நித்திஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மணிமாறன் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார் மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எதுஎன்று கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் மீதும் உளுந்தூர்பேட்டை ஜூப்ளி தெருவை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த பிரசாந்தை கைதுசெய்ததோடு அவரிடம் இருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.