மின்இழுவை ரெயில்நிலையத்தில் நவீன பெட்டிகள் பொருத்தும் பணி தொடக்கம்
பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையத்தில், நவீன வசதிகளுடன் கூடிய ரெயில்பெட்டிகள் பொருத்துவதற்கான பணி தொடங்கியுள்ளது.
மின்இழுவை ரெயில்
பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதானமாக உள்ளது. இதுதவிர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
பழனி மேற்கு கிரிவீதியில் உள்ள ரெயில்நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு ரெயிலில் 40 பக்தர்கள் வரை பயணிக்கலாம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய 2 மின்இழுவை ரெயில்பெட்டிகள் வாங்கப்பட்டது. குளிர்சாதன வசதி, டி.வி., கேமரா என பல்வேறு வசதிகள் கொண்ட இந்த பெட்டியில் 36 பேர் வரை பயணிக்க முடியும்.
இந்த ரெயில்பெட்டிகளை கோவில் மின்இழுவை ரெயில்நிலையத்தில் பொருத்தி, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நவீன பெட்டிகள்
இதைத்தொடர்ந்து தற்போது பழனி மின்இழுவை ரெயில்நிலையத்தில் நவீன ரெயில் பெட்டிகளை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. அதாவது நவீன ரெயில் பெட்டிகள் தற்போதுள்ள பெட்டிகளைவிட அகலமானது.
எனவே அடிவாரம் மற்றும் மலைக்கோவில் ரெயில்நிலைய மேடைகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அடிவாரத்தில் உள்ள ரெயில்நிலைய நடைமேடை பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, பக்தர்களின் வசதிக்காக நவீன ரெயில் பெட்டிகள் வாங்கப்பட்டது. அவற்றை நிலையத்தில் பொருத்தி இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் இந்த பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் பயணிக்கும் வகையில் சேவை தொடங்கப்படும் என்றனர்.