கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினையில் விரைவில் முடிவு எட்டப்படும்


கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினையில் விரைவில் முடிவு எட்டப்படும்
x

கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினையில் விரைவில் முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் பிரச்சினையில் விரைவில் முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மக்கள் சேவை மையம்

ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சேவை மையம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மக்கள் சேவை மையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளார். பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடங்களுக்கு முதல்-அமைச்சர் நேராக சென்று குறைகளை கேட்டறிந்து, அதை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

பல்வேறு திட்டங்கள்

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 85 திட்டங்களை முன்னெடுத்து பணிகளை தொடங்கி உள்ளோம். அதில் 2 புறநகர் பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு சுமார் ரூ.200 கோடி செலவாகும். சி.என். கல்லூரியில் சில முன்னேற்றப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. ஈரோடு மாநகராட்சியில் மக்களுக்கான சேவை மையம் தொடங்கி வைத்து உள்ளோம். இதன்மூலம் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காணப்படும். 24 மணிநேரமும் சேவை மையம் செயல்படும். சாலையோர கடைக்காரர்களுக்கு 40 தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு உள்ளன.

குடிநீர், சாலை பிரச்சினைகளையும், நீண்ட நாட்கள் தேங்கி இருக்கும் பிரச்சினையையும் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சித்தோடு பகுதியில் ஈரோடு- சத்தி ரோட்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது. இதனால் அங்குள்ள 65 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. அங்குள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுகள்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக விவசாயிகள் 2 பிரிவுகளாக உள்ளனர். இந்த பிரச்சினையில் நியாயமான முடிவை எடுக்க பெரு முயற்சி எடுத்து வருகிறோம். விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதில் அரசு திட்டவட்டமாக உள்ளது. எனவே, மேல்மடை விவசாயிகள் முதல் கீழ்மடை விவசாயிகள் வரை எவ்வித பாதிப்பு அடையாமலும், வாய்க்காலில் செல்லும் தண்ணீர் வீணாகாமலும் இருக்கும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஒரு முடிவு எட்டப்படும்.

அமைச்சர்கள் தங்களது பணிகளை தெளிவாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து வருகிறோம். 24 மணிநேரமும் அமைச்சர்கள் மக்கள் பணிக்காக சுற்றி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு மாதம் வேலை செய்து இருக்கிறோம் என்றால், முதல்-அமைச்சர் ஒரு மாதமாக என்னென்ன வேலைகள் செய்யப்பட்டு உள்ளது என்று ஆய்வு செய்கிறார். எங்களுக்கு மக்கள் பணிகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இந்த பணிகளை செய்யும்போது குற்றச்சாட்டுகள் வந்தால், சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story