விமானத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய பெண் மனு மீது விசாரணை
விமானத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரிய பெண் மனு மீது விசாரணை செய்யப்படுகிறது
தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதீய ஜனதாவின் தலைவரும், தற்போதைய தெலுங்கானாவின் கவர்னருமான தமிழிசையும் பயணம் செய்தார். விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து நிலுவையில் இருந்தது.
இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு கடந்த விசாரணையின் போது ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் லூயிஸ் சோபியா சார்பில் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்தது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும், என்றார். அப்போது குறுக்கிட்ட அண்ணாமலை தரப்பு வக்கீல், மனுதாரர் விமானத்தில் கோஷமிட்டது குற்றச்செயலாகும் என வாதாடினார். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்தார்.