காட்பாடி ரெயில்வே மேம்பாலம் வருகிற 1-ந்தேதி முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும்
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என கலெக்டர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் போக்குவரத்திற்கு திறக்கப்படும் என கலெக்டர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
பாலம் சீரமைப்பு பணி
காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் கடந்த 1-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இதனால் சித்தூர், திருப்பதி, செங்குட்டை, கல்புதூர், கிறிஸ்டியான்பேட்டை, லத்தேரி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதைகளில் இயக்கப்படுகின்றன.
ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருவதாக அ.தி.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு குற்றம் சாட்டினார். மேலும் கம்யூனிஸ்டு கட்சியினர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி., டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
1-ந் தேதி முதல்
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மிக முக்கியமானதாகும். இந்த மேம்பாலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவின் பேரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாலத்தில் இணைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு விட்டன. இதில் சிமெண்டு கலவை பூச்சு பூசப்பட்டுள்ளது. இவை 15 முதல் 20 நாட்களுக்கு பிறகுதான் தரமானதாக மாறும். எனவே திட்டமிட்டபடி வருகிற 1-ந்தேதிக்குள் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 காலம்.