'தி கேரளா ஸ்டோரி' சர்ச்சை சினிமா வெளியீடுக்கு எதிராக வழக்குவிசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இந்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் ஒரு சினிமாப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியில் 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் ஒரு சினிமாப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், காதல் மற்றும் மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுகிற பெண்களின் கதை என சொல்லப்படுகிறது.
சுதிப்டோ இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படம், வெள்ளிக்கிழமை வெளியாகவும் உள்ளது. இதன் வெளியீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்தினா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பாக நேற்று முறையிடப்பட்டது.
வழக்குதாரர் சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் மற்றும் வக்கீல் நிஜாம் பாஷா ஆகியோர் முறையிட்டனர்.
இந்தப் படம் மிக மோசமான வெறுப்பு பேச்சு, இது முற்றிலும் ஒலி-காட்சி பிரசாரம் என வாதிடப்பட்டது.
தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், இதைக் காரணம் காட்டி படத்தின் வெளியீட்டை எதிர்க்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி விசாரிக்க மறுத்து விட்டது.