விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தஞ்சை மாவட்டத்தில் 61 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடி தடை காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடை காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் இந்த ஆண்டும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலுக்கு சென்றனர்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள். தடை காலம் என்பதால் கடந்த 2 மாதங்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தடை காலத்தையொட்டி படகுகளை பராமரிப்பது, வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் மீன்பிடி தடை காலம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து 61 நாட்களுக்கு பிறகு நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் துறைமுக கடைகாரர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்.