பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதி


பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதி
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

108 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், எடை அதிகரிப்பாலும் பாலத்தை திறக்க முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

108 ஆண்டுகள் கடந்து விட்டதாலும், எடை அதிகரிப்பாலும் பாலத்தை திறக்க முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

தூக்குப்பாலம்

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 108 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்த பாம்பன் ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாலம் வழியாக ராமேசுவரம் வரையிலான ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம், ராமநாதபுரம் வரை மட்டுமே கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.

பாம்பன் தூக்குப்பாலத்தை கப்பல்கள் கடக்க வரும்போது துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, ரெயில்வே துறை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்த பின்னர் தூக்குப்பாலமானது திறக்கப்படும். பாலத்தின் 2 இணைப்புகளிலும் மொத்தம் 16 பேர் சேர்ந்து கம்பியை பிடித்தபடி சுற்றவே தூக்குப்பாலம் சிறிது சிறிதாக மேல் நோக்கி வந்து திறக்க ஆரம்பித்து விடும். கப்பல்கள் கடந்து சென்ற பின்னர் மீண்டும் அந்த கம்பியை கீழ்நோக்கி சுற்றவே பாலம் கீழே இறங்கி மூடிவிடும். கடந்த 108 ஆண்டுகளாகவே மனிதர்கள் மூலமாகவே தூக்குப்பாலம் திறந்து, மூடப்பட்டு வருகின்றது.

ஒரு மணி நேரம் போராடி

இந்த நிலையில் சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக வந்த இழுவை கப்பல் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல நின்றது. நேற்று இந்த இழுவை கப்பல் கடந்து செல்வதற்காக பாலத்தின் 2 இணைப்புகளிலும் 16 தொழிலாளர்கள் சேர்ந்து பாலத்தை திறக்க முயன்றனர். ஆனால் பாலத்தின் எடை அதிகரிப்பு மற்றும் உப்பு காற்றின் துரு பிடிமானமும் அதிகளவு படிந்திருந்ததால் அதனை திறக்க முடியாமல் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி 4 பகுதிகளிலும் உள்ள கம்பிகளை பிடித்து தொங்கியபடி கஷ்டப்பட்டு தூக்குப்பாலத்தை திறந்தனர். சாதாரணமாக 10 நிமிடத்தில் திறக்கப்படும் பாலம் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக திறக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர்.

புதிய பாலம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், மீட்டர் கேஜ் பாதையாக ரெயில்வே பாலம் இருந்த வரையிலும் தூக்குப்பாலத்தின் எடை 200 டன்னாக இருந்தது. 2006-ம் ஆண்டுக்கு பின்னர் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு அதிகமான ரெயில்கள் வர தொடங்கியதால் பாலத்தின் எடையும் 280 டன் அதிகரிக்கப்பட்டது. தற்போது பாலத்தின் மொத்த எடை 480 டன் ஆகும். பொதுவாக பாலத்தை வாரம் ஒரு முறை அவ்வப்போது திறந்து மூட வேண்டும்.

கடலுக்குள் அமைந்துள்ளதால் உப்பு காற்றின் படிமானம் கம்பிகள் மீது படிந்து வருவதாலும், எடை அதிகமாக உள்ளதாலும் பாலத்தை திறந்து மூடுவதில் சிரமம் உள்ளது. இத்தனை ஆண்டுகள் பாலத்தை சரியாக பராமரித்து வந்ததால்தான் தூக்குப்பாலம் செயல்பாட்டில் இருந்துள்ளது. புதிய தூக்கு பாலம் வந்த பின்னர் எந்த பிரச்சினையும் இருக்காது என்றார்.


Next Story