பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரிகளை தூர்வார வேண்டும்


பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரிகளை தூர்வார வேண்டும்
x

பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரிகளை தூர்வார வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

வாக்கு வாதம்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாய பணிக்கு மாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் எந்த ஒரு பணியும் நடைபெறுவது இல்லை. அவர்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளதால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது என குற்றம்சாட்டினர்.

அதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் மரம் வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார் என விவசாயிகள் குற்றம் சாட்டினர். அவர்களை சமாதானம் செய்த கலெக்டர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் செய்து வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். வேலை செய்யாமல் உள்ள தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்க வேண்டும் என ஊராட்சிகளின் உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, விவசாயிகள் பேசியதாவது:-

டாஸ்மாக் கடைகள்

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மட்றப்பள்ளி சந்தையில் சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், 1,400 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் நடவடிக்கைகளை விவசாயிகள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் அடுத்த திருமால்நகர், ஏரிக்கோடி பகுதியில் வரிசையாக 3 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வரும் மதுப்பிரியர்களுக்காக தள்ளுவண்டி கடைகளில் அசைவ உணவுகளை தயாரித்து விற்க 8 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது அருந்தவரும் நபர்கள் காலி மதுபாட்டில்களையும், சாப்பிட்ட உணவு கழிவுகளையும் விவசாய நிலங்களில் வீசுவதால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே, அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.

தூர்வார வேண்டும்

வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களே அரிசி கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் இருந்து அண்ணா நகர் சோதனைச்சாவடி வழியாக சாராயம் கடத்தப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். கோட்ட அளவிலான குறை தீர்வுக்கூட்டத்துக்கு அரசு அலுவலர்கள் வருவதில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவேண்டியுள்ளது. இதைசரி செய்ய வேண்டும்.

கனமழை பெய்தும் தண்ணீர் வராத ஏரிகளை கணக்கெடுத்து, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஏரிகளை தூர்வாரி தண்ணீர் சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்திக்கு விலை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் நீர்மட்டத்தை அதிகரிக்கவே 1,400 பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதில் ஈடுபடும் 100 நாள் தொழிலாளர்களுக்கு முழு கூலியும் கிடைக்கும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக நீர்வரத்து கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர் பச்சையப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story