கடைசி சுதந்திர போராட்ட தியாகி மரணம்


கடைசி சுதந்திர போராட்ட தியாகி மரணம்
x

பெரம்பலூர் மாவட்டத்தின் கடைசி சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி 98 வயதில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பெரம்பலூர்

தேசிய ராணுவ படையில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில் பலர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் செயல்பட்டு வந்த ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவ படையில் பணிபுரிந்த சுதந்திர போராட்ட தியாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தற்போது ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி(வயது 98) என்பவர் மட்டும் உயிருடன் இருந்து வந்தார். மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டனர்.

வயது முதிர்வின் காரணமாக மரணம்

இந்த நிலையில் உடல் நலக்குறைவாலும், வயது முதிர்வின் காரணமாகவும் தனது மகன் வழி பேரன் வீட்டில் வசித்து வந்த கிருஷ்ணசாமி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்த கடைசி சுதந்திர போராட்ட தியாகியான கிருஷ்ணசாமியும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணசாமி அதே ஊரில் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக்கொண்ட அவர் தனது குடும்ப வறுமை காரணமாக பிழைப்புக்காக தனது 12 வயதில் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில்...

விவரம் தெரிந்த வயதில் சிங்கப்பூர் சென்ற கிருஷ்ணசாமி அங்கு துறைமுகத்தில் கப்பலில் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது இந்தியா சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்திருந்த நிலையில், அங்கு வேலை பார்த்து வந்த இந்திய நாட்டு மக்களிடம் வீட்டில் ஒருவரை இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராட அனுப்புங்கள் என்று அழைப்பு விடுத்து சென்றார். இதையடுத்து அவர் தனது 19 வயதில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ படையில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பல்வேறு நாடுகளில் பயிற்சி பெற்ற கிருஷ்ணசாமி தேசிய ராணுவ படையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்தார். கிருஷ்ணசாமி ரங்கூன் படை பிரிவில் பணியாற்றியும், கொரில்லா படையில் முக்கிய தலைவராகவும் விளங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போரின் காரணமாக மலேசியா மற்றும் பர்மா ஆகிய வெளிநாடுகளில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிங்கப்பூர் சிறையில் இருந்து விடுதலையானார். அவருக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றாலும், மாநில அரசின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

கலெக்டர் மரியாதை

உயிரிழந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மதியம் நேரில் சென்று மாலை அணிவித்து வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டிருந்தது. பின்னர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தியாகிகளுக்கான ஈமச்சடங்கு நிதி தொகை ரூ.5 ஆயிரத்தினை கிருஷ்ணசாமியின் குடும்பத்தினரிடம் வழங்கினார். கிருஷ்ணசாமியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை கிருஷ்ணசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story