சாதாரண குடிமகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் சாதாரண குடிமகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
வட்டி விகிதம் உயர்வு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்பு குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
ஓய்வு பெற்ற வங்கி ஊழியரும், புதுக்கோட்டை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளருமான ராஜேந்திரன்:- ''வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்.
நிரந்தர வைப்பு
இந்த உத்தரவை வங்கிகள் அடுத்ததாக அமல்படுத்தும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் வட்டியை செலுத்துவதற்கு நிரந்தர வட்டி அல்லது மாறுபடும் வட்டி (பிளோட்டிங்) விகிதத்தில் செலுத்த விருப்பம் தெரிவித்திருப்பார்கள். அந்த அடிப்படையில் வட்டியை செலுத்துவது உண்டு. இதில் தவணை காலத்தை அதிகரிப்பு அல்லது வட்டிக்கான தவணை தொகையை அதிகரித்தல் என்பதில் வங்கிகளுக்கு வேறுபடும். இதில் வாடிக்கையாளர்களிடமும் விருப்பம் கேட்டு அதற்கேற்ப சில நேரங்களில் வங்கிகள் செயல்படும். கடனுக்கான வட்டி தொகை உயர்த்துவதில் வாடிக்கையாளர்களுக்கு சற்று பாதிப்பு தான். அதே நேரத்தில் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதமும் உயரும். இதனால் நிரந்தர வைப்பு தொகை செலுத்தியவர்கள் பயன்பெறுவார்கள்'' என்றார்.
வாழ்வாதாரம் பாதிக்கும்
ஆரியூரை சேர்ந்த முத்துசரவணன் கூறுகையில், வட்டி விகிதம் 0.5 சதவீதம் கூடுதல் முடிவு என்பது சாதாரண மக்களை பாதிப்பதாக உள்ளது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில் சாதாரண குடிமகனின் வாழ்வாதாரம் பாதிக்கும். இன்றைய காலத்தில் வங்கிக்கடன் பெற்று வீடு கட்டியுள்ளவர்கள், தவணை செலுத்துவதில் கூடுதல் வட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்
முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த அ.ரகுமத்துல்லா கூறுகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் பொழுது வட்டி விகிதம் உயர்வு என்பது நடுத்தர மற்றும் ஏழைமக்களை பெரிதும் பாதிக்கும். கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இருசக்கர வாகனத்திற்கு மதாந்திர கடன் தவணை செலுத்தும் என்னை போன்ற நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆகவே கடனுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தியதை மறுபரிசீலனை செய்து மாற்று வழியை செயல்படுத்த வேண்டும் என்றார்.