லாரி டிரைவர் கத்தியால் வெட்டிக்கொலை
செஞ்சி அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:
செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன்கள் மாரிமுத்து(வயது 32), வீரமுத்து(27). இதில் வீரமுத்து லாரி டிரைவராக இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் வீரமுத்து செஞ்சியில் இருந்து ஜெயங்கொண்டான் சத்யா நகருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மாரிமுத்து, அவரை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதனால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டு விழுந்தது. இதில் ரத்தவெள்ளத்தில் வீரமுத்து நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே மாரிமுத்து அங்கிருந்து ஓடிவிட்டார்.
சாவு
இது பற்றி அறிந்ததும் வீரமுத்து மனைவி மங்கம்மாள் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரமுத்து பரிதாபமாக இறந்தார்.
அண்ணியுடன் கள்ளத்தொடர்பு?
இதுகுறித்து மங்கம்மாள் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது கணவர் வீரமுத்து அண்ணியுடன்(மாரிமுத்துவின் மனைவி) கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக மாரிமுத்து சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் தனது கணவரை மாரிமுத்து கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டார். அவரை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.