'லிப்ட்' கேட்பது போல் நடித்து, லாரி டிரைவரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை; மர்மநபர்கள் துணிகரம்


லிப்ட் கேட்பது போல் நடித்து, லாரி டிரைவரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை; மர்மநபர்கள் துணிகரம்
x

வேடசந்தூர் அருகே ‘லிப்ட்’ கேட்பது போல் நடித்து, லாரி டிரைவரை கட்டிப்போட்டு மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே 'லிப்ட்' கேட்பது போல் நடித்து, லாரி டிரைவரை கட்டிப்போட்டு மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

லாரி டிரைவர்

தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன் (வயது 30). லாரி டிரைவர். இவர் நேற்று லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், விருதலைபட்டி மேம்பாலத்தில் நேற்று இரவு அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரமாக நின்றிருந்த மர்மநபர், கையை காட்டி 'லிப்ட்' கேட்டார்.

இதனால் மதனும் லாரியை நிறுத்தி அந்த நபரை லாரியில் ஏற்றினார். லாரியில் ஏறியதும் அந்த மர்மநபர் தான் வைத்திருந்த பட்டா கத்தியை திடீரென்று எடுத்து மதனின் கழுத்தில் வைத்து, பணத்தை கேட்டு மிரட்டினார். அந்த நேரத்தில் மேலும் 2 பேர் லாரியில் ஏறினர்.

பின்னர் 3 பேருமாக சேர்ந்து மதனின் கைகளையும், கண்களையும் துணியால் கட்டிவிட்டு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.3,500ஐ கொள்ைளயடித்துவிட்டு தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

அதன்பிறகு மதன் தனது கைகளில் கட்டியிருந்த துணியை அவரே அவிழ்த்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து லாரியை ஓட்டிக்கொண்டு மினுக்கம்பட்டி அருகே உள்ள டீக்கடை பகுதிக்கு வந்தார். அங்கு லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு, அங்குள்ளவர்கள் மூலம் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் போலீசார், மதனிடம் விசாரணை நடத்தினர். மேலும் மதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story