காதல் திருமணம் நாளை நடக்க இருந்த நிலையில் தனியார் பள்ளி ஊழியர் தற்கொலை


காதல் திருமணம் நாளை நடக்க இருந்த நிலையில் தனியார் பள்ளி ஊழியர் தற்கொலை
x

காதல் திருமணம் நாளை நடக்க இருந்த நிலையில் தனியார் பள்ளி ஊழியர் தற்கொலை செய்துகொண்டாா்

ஈரோடு

அந்தியூர் அருகே காதல் திருமணம் நாளை நடக்க இருந்த நிலையில் தனியார் பள்ளி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

அந்தியூர் அருகே உள்ள ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சரசு. மகன் கேசவமூர்த்தி (வயது 28). செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டார்.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கேசவமூர்த்தி ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அதே பள்ளியில் அலுவலக ஊழியராக வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும், கேசவமூர்த்தியும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

தற்கொலை

அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கேசவமூர்த்திக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு கேசவமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.

பக்கத்து வீட்டு சிறுவன் வீட்டுக்குள் சென்றபோது கேசவமூர்த்தி தூக்கில் தொங்குவதை பார்த்து பயத்தில் அலறினான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் ஓடிய சரசும், அவருடைய உறவினர்களும் அதை பார்த்து அலறி துடித்தனர்.

நிபந்தனைகள் விதிப்பு

இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கேசவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரணம் என்ன?

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக மணமக்கள் அடிக்கடி செல்போனில் தங்களுடைய வருங்காலம் எப்படி இருக்கவேண்டும் என்று பேசி வந்துள்ளனர். அப்போது மணப்பெண் கேசவமூர்த்தியிடம் திருமணத்துக்கு பின்னர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதைக்கேட்டு கேசவமூர்த்தி திருமணத்துக்கு முன்பே இப்படி கட்டளையிடுகிறாரே என்று கவலை பட்டு வந்துள்ளார். இதன் காரணமாகத்தான் கேசவமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்றனர்.

நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் பள்ளி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story