தம்பதியை காரில் கடத்தியவர் கைது
மணப்பாறை அருகே தம்பதியை காரில் கடத்தியவரை கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணப்பாறை அருகே தம்பதியை காரில் கடத்தியவரை கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தம்பதி கடத்தல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆபிசர்ஸ் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 53). ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா (42). இந்த தம்பதியின் மகன் கலைச்செல்வன். இவர் சென்னை ஐகோர்ட்டில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.
பழனியப்பன் சென்னையில் நிலம் வாங்க முடிவு செய்து இருந்தார். இதற்காக நிலத்தை பார்க்க தம்பதி இருவரும் நேற்று முன்தினம் காரில் சென்னை சென்றனர். திருச்சி, சமயபுரம் அருகே உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துவிட்டு கழிப்பறை சென்றபோது இருவரையும் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தங்களை போலீஸ் எனவும் இடம் வாங்கச் செல்வது குறித்து விசாரணை செய்யவேண்டும் எனக்கூறி காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் வந்த காரில் ஒருவரையும் மர்ம கும்பல் வந்த காரில் மற்றொருவரையும் தனித்தனியாக கடத்திச் சென்றனர்.
அரிவாளை காட்டி மிரட்டல்
காரில் சென்ற போது நிலம் வாங்க வைத்திருக்கும் பணம் குறித்து கேட்டு பணத்தை தருமாறு கூறியுள்ளனர். அப்போது பணம் கொண்டுவரவில்லை எனக்கூறியதும், வீட்டில் எவ்வளவு பணம், நகை உள்ளது, மகனிடம் கூறி அதனை எடுத்துவந்து தருமாறு சந்திராவை அரிவாள், கத்தியை காட்டி மிரட்டினர்.
இதைத்தொடர்ந்து சந்திரா மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைக்கூறி பணம் கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதற்கிடையே கடத்தல் கும்பல் சேலத்திற்கு சென்ற நிலையில் பணத்தை மணப்பாறைக்கு வந்து வாங்கிக் கொள்கிறோம் என கலைச்செல்வனிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கலைச்செல்வன் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
ஒருவர் பிடிபட்டார்
இந்த நிலையில் போலீசார் அறிவுரைப்படி கலைச்செல்வன் போனில் கடத்தல் கும்பலிடம் பேசி, பணத்தை தருவதாக கூறிஉள்ளார். கடத்தல் கும்பல் கரூர் மாவட்டம் தோகைமலைக்கு வருமாறு அழைத்ததைத்தொடர்ந்து போலீசாரும் மாறுவேடத்தில் கலைச்செல்வனுடன் சென்றனர். இதைத்தொடர்ந்து கடத்தல் கும்பலில் ஒருவரான திருச்சி, துவாக்குடியைச் சேர்ந்த காளிதாஸ் (50) என்பவர் பணம் வாங்க வந்தபோது, மாறுவேடத்தில் இருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
நகை-பணம் பறிப்பு
இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் கரூர் சென்று அங்கிருந்து திண்டுக்கல் சென்றனர். போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்து திண்டுக்கல் - தேனி சாலையில் உள்ள கரூர் சாலையின் மேம்பாலம் அருகே சந்திராவிடம் இருப்பதை கொடுங்கள் என மிரட்டி, அவரிடம் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தம்பதியை இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் தம்பதி இருவரும் பஸ்சில் ஏறி மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்ததை போலீசாரிடம் விளக்கி கூறினர்.
.5 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை சேர்ந்த சிவகங்கை மாவட்டம், ஆராவயலைச் சேர்ந்த பிரேம் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பணத்திற்காக தம்பதி கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.