ஓட்டல் ஊழியரை தாக்கியவர் கைது
ராமநாதபுரத்தில் ஓட்டல் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் பாரதிநகரில் ஒரு ஓட்டல் அறையில் தனியார் நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விழாவிற்கு ஓட்டல் முன்பு சிலர் பிளக்ஸ் போர்டு வைக்க முயன்றார்களாம். இதற்கு ஓட்டல் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விழா முடிந்து ஓட்டலில் சாப்பிட்டபோது சிலர் முன்விரோதத்தில் பிரைடுரைசில் 1 ரூபாய் நாணயம் கிடந்ததாக கூறி தகராறு செய்தார்களாம். இதனை ஓட்டல் ஊழியர் புதுக்கோட்டை வெள்ளஞ்சல் தமிழ்செல்வன் என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் தமிழ்செல்வனை தாக்கியதோடு சாப்பாட்டு தட்டு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி பீங்கானால் தலையில் தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் தென்றல்நகரை சேர்ந்த வினோத் (வயது 28) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக வாலாந்தரவை ரகு, ராமநாதபுரம் சதீஷ், செந்தமிழ்நகர் செந்தமிழ்செல்வன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.