உண்டியலை உடைத்து திருடியவர் கைது
கூடலூரில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரும் சிக்கினார்.
கூடலூர்
கூடலூரில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரும் சிக்கினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உண்டியலை உடைத்து திருட்டு
கூடலூர் புஷ்பகிரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆலய நிர்வாகம் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு கூடலூர் நந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஹெலன் (வயது 60) என்ற மூதாட்டி பழைய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர், ஹெலன் கையில் வைத்திருந்த கைப்பையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து கூடலூர் போலீசில் ஹெலன் புகார் செய்தார்.
2 பேர் கைது
கூடலூர் நகரில் தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து திருடியதாக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த வினோத் (வயது 55) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளா, கூடலூர் பகுதியில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களின் உண்டியல்களை உடைத்து திருடி வந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூர் நீதிமன்றத்தில் வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் மூதாட்டி ஹெலனிடம் வழிப்பறி செய்ததாக மரப்பாலம் காளிதாஸ் (28) என்பவரை கூடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.