கோவில் உண்டியலை திருடிச்சென்றவர் கைது
ஜோலார்பேட்டை அருகே கோவில் உண்டியலை திருடிச்சென்றவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் அதே பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வருகிறார்.
கடந்த 14-ந் தேதி காலை சுகுமார் முத்துமாரியம்மன் கோவிலை திறக்க சென்றபோது கோவிலில் வைத்திருந்த உண்டியல் திருடு போனது தெரிய வந்தது. இதனை அடுத்து சுகுமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கோவில் உண்டியலை திருடிய நபர்களை சி.சி.டி.வி. கேமரா பதிவை வைத்து தேடி வந்தனர்.
அதில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் உண்டியலை திருடிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் மேம்பால பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தியபோது சி.சி.டி.வி. கேமராவில் பதிவானவர் அடையாளம் இருந்தது.
விசாரணையில் அம்மன் கோவிலில் உண்டியலை திருடிச் சென்ற வாலிபர் அவர்தான் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகன் ஜிவித்குமார் (வயது 24) என்பதும் இவருடன் வினோத்குமார், ஆனந்தகுமார் ஆகியோர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
திருடிய பணத்தை மது குடிக்க பயன்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜிவித்குமார்போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்குமார் மற்றும் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.