கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தவர் சிக்கினார்
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தவர் சிக்கினார். அவரிடம் இருந்து கார், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்
கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா சப்ளை செய்தவர் சிக்கினார். அவரிடம் இருந்து கார், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய கண்காணிப்பு
கூடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளை உணவு பாதுகாப்பு துறையினர் மூலம் சீல் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் நகரில் உள்ள சில கடைகளுக்கு குட்கா பாக்கெட்டுகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரன், இப்ராஹிம் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நேற்று காலை 8 மணிக்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
குட்கா பாக்கெட்டுகள்
அப்போது ஒரு ஆட்டோவில் சில மூட்டைகளை வைத்து கொண்டு ஆசாமி ஒருவர் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சென்று ஆட்டோவை சுற்றி வளைத்து அதில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதுகுறித்து கேட்டபோது, குட்கா பாக்கெட்டுகளை கடைகளுக்கு ரகசியமாக சப்ளை செய்தது தெரியவந்தது. பின்னர் அந்த ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கூடலூர் வேடன்வயலை சேர்ந்த தேவராஜ் (வயது 40) என்பதும், கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வந்து ஆட்டோ மூலம் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர் வைத்திருந்த 1,145 குட்கா பாக்கெட்டுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.