விலைவாசி ஏற்றத்தின் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும்;ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி


விலைவாசி ஏற்றத்தின் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும்;ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி
x

விலைவாசி ஏற்றத்தின் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும் என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்.

ஈரோடு

விலைவாசி ஏற்றத்தின் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும் என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்.

தனிநபர் வருமானம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு மணல்மேடு பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செம்மலை வீடு, வீடாக சென்றும், திறந்த வேனில் சென்றபடியும் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு அதிகமாகி வருகிறது. கடந்த 22 மாதங்களில் தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தலில் தெரியும்

அத்தியாவசிய தேவையான பால் விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் தனிநபர் வருமானம் உயரவில்லை. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சோதனையின் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும். தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு மக்கள் சேவை செய்வதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. அவர் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

நீட்தேர்வு

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பொதுமக்களை கலந்து கொள்ள விடாமல் தி.மு.க.வினர் தடுத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு உள்ளூர் மக்களே ஆர்வமாக வந்து கலந்து கொண்டனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 520 திட்டங்களை அறிவித்து இருந்தனர். அதில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு திட்டத்தையும் குறிப்பிட்டு அவர்களால் சொல்ல முடியவில்லை. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை ரத்து செய்யப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மீண்டும் அமல் படுத்தப்படவில்லை. எனவே நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என பலதரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியின் மீது வெறுப்புடன் உள்ளனர்.

இந்த பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story