படியளந்த லீலையை உணர்த்தும் மார்கழி அஷ்டமி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் உலா வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர் சப்பரங்கள் - வீதிகளில் தூவிய அரிசியை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற பெண்கள்


மார்கழி மாத அஷ்டமியான நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர், தேர் போன்ற வடிவில் தயார் செய்த சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்கள் வெள்ளத்தில் உலா வந்தனர். வீதிகளில் தூவிய அரிசியை சேகரித்து பெண்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்

மதுரை


மார்கழி மாத அஷ்டமியான நேற்று மீனாட்சி-சுந்தரேசுவரர், தேர் போன்ற வடிவில் தயார் செய்த சப்பரங்களில் எழுந்தருளி பக்தர்கள் வெள்ளத்தில் உலா வந்தனர். வீதிகளில் தூவிய அரிசியை சேகரித்து பெண்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.

அஷ்டமி சப்பர விழா

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளந்த லீலையை விளக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மார்கழி தேய்பிறை அஷ்டமி திருவிழா நேற்று நடத்தது. இதையொட்டி தேர் போன்ற பெரிய சப்பரங்கள் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தன.

வீதிகளில் திரண்ட பக்தர்கள்

அதிகாலையில் சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் கீழமாசி வீதி தேரடி பகுதிக்கு சென்றனர். அங்கு ரிஷப வாகனங்களில் இருந்தபடியே தேர் போன்ற சப்பரங்களில் எழுந்தருளினர்.

பெரிய சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறிய சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் வீற்றிருந்தனர். காலை 6.10 மணி அளவில் சப்பரங்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். வெளி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி, அம்மனை தரிசித்தனர்.

யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக மதியம் 1.45 மணிக்கு சப்பரங்கள் தேரடியை அடைந்தன.

அம்மன் சப்பரத்தை இழுத்த பெண்கள்

இதில் அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தது தனிச்சிறப்பாகும். அப்போது, அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் படி அளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வந்தார்கள்.

கீழே சிதறி கிடந்த அரிசியை சேகரித்து பெண்கள் உள்பட ஏராளமானோர்,, தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். அந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அன்னம் குறையாது என்றும், பசி, வறுமை இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

3 மணி நேரம் தாமதம்

முன்னதாக சப்பர பவனியின்போது வழி நெடுக பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது. இதனால் சப்பரத்தை இழுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. வழக்கத்தைவிட நேற்று சுமார் 3 மணி நேரம் தாமதமாக சப்பரங்கள் நிலைக்கு வந்தடைந்தன. சுவாமி, அம்மன் எழுந்தருளிய சப்பரங்கள் இந்தாண்டு புதிதாக செய்துள்ளனர். அதில் பிரேக் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. எனவே கூட்டத்தின் நடுவே கட்டுப்படுத்த பழைய முறையில், தடுப்பு கட்டை போட்டுதான் அதனை நிறுத்தினர். பழைய சப்பரங்களில் பிரேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சப்பரம் தாமத்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story