பாறையில் வழுக்கி விழுந்து மெக்கானிக் பலி


பாறையில் வழுக்கி விழுந்து மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 26 Nov 2022 12:30 AM IST (Updated: 26 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே பாறையில் வழுக்கி விழுந்து மெக்கானிக் பலியானார்.

திண்டுக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏகபெருமாளூரை சேர்ந்தவர் சேகர் (வயது 50). டிராக்டர் மெக்கானிக். இவர் மாதந்தோறும் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பழனி அருகே பொன்னிமலையில் உள்ள சித்தர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி சாமி தரிசனம் செய்ய பொன்னிமலை சித்தர் கோவிலுக்கு சேகர் வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை பொன்னிமலையில் சேகர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேகர் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, பொன்னி மலையின் பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story