கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிமெக்கானிக் உண்ணாவிரதம் இருக்க முயற்சிகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மெக்கானிக் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், பிப்.21-
எடப்பாடி வெள்ளாண்டிவலசு நைனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 48), மெக்கானிக். இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் கந்துவட்டிக்காரர்களிடம் சொத்து பத்திரத்தை மீட்டு தரக்கோரியும், கந்துவட்டி கொடுமைக்கு நீதி கேட்டும் திடீரென உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது மெக்கானிக் செல்வம் கூறும் போது, 'தொழில் செய்வதற்காக 2 பேரிடம் 3 ஆயிரம் சதுரடி நில பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.11 லட்சம் கடன் வாங்கினேன். இதற்கு வட்டியாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். அதன்பிறகு வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், இதனால் எனது அடமானம் வைத்த பத்திரத்தை திருப்பி கொடுக்குமாறும் கேட்டேன். அதற்கு எனது அண்ணன் கணபதி வாங்கிய ரூ.24 லட்சம் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.54 லட்சத்தையும் சேர்த்து கொடுக்குமாறு மிரட்டுகிறார்கள். அப்போது, தான் அடமானம் வைத்த சொத்து பத்திரத்தை திருப்பி கொடுப்போம் என்று கூறி வருகின்றனர். இதனால் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களிடம் இருந்து எனது சொத்து பத்திரத்தை மீட்டு தர வேண்டும்' என்றார்கள். இதைத்தொடர்ந்து மெக்கானிக் செல்வம் கூறுவது உண்மையா? அவரிடம் கந்துவட்டி கும்பல் பணம் கேட்டு மிரட்டுகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---