மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும்
மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும்
திருக்காட்டுப்பள்ளி:
வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறினார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் வருகிற 23-ந் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் அணையை நேரில் பார்வையிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கல்லணையை பார்வையிட்டனர்
அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார், காவிரி நீர் ஆதாரத்துறை தமிழக தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை 5 மணிக்கு தஞ்ைச மாவட்டம் கல்லணையை பார்வையிடுவதற்காக வந்தனர். அவர்கள் காரிலேயே கல்லணை கால்வாய் தலைப்புக்கு சென்று பாலத்தின் மேல் பகுதியில் நின்றபடி கல்லணைக்கு வரும் நீரின் அளவு, வெண்ணாற்றில் ெசல்லும் நீரின் அளவு, கல்லணைக்கால்வாய் மற்றும் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து தமிழக தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தியிடம் கேட்டறிந்தனர்.
அதன் பின்னர் கல்லணையில் உள்ள பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும்
கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை பார்வையிட்டு வருகிறோம். வருகிற 23-ந் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. இது சுதந்திரமாக செயல்படும். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. மேகதாது அணை குறித்து விவாதிக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதனால்தான் விவாதத்திற்கு எடுத்து உள்ளோம். இதுகுறித்து சட்ட ஆலோசனையும் பெற்று உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மழை நீர்தான் வந்தது
காவிரி நீர் ஆதாரத்துறை தமிழக தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, தற்போது மே மற்றும் ஜூன் மாதங்களில் மேட்டூர் அணைக்கு வந்த தண்ணீர். மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் வந்தது. இந்த தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து வந்தது அல்ல. தமிழகத்திற்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வழங்க வேண்டிய தண்ணீர் தரப்படவில்லை என்றார்.
ஒப்புதல் அளிக்க கூடாது
பின்னர் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வக்கீல் ஜீவக்குமார் ஒரு கோரிக்ைக மனு வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கினால் தமிழகத்தில் உள்ள 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகப்போய் விடும் சூழல் உருவாகும். ஆகவே எந்த காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளிக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பாலைவனமாகி விடும்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் கொடுத்த மனுவில், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் முழுவதும் பாலைவனமாகி விடும். தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழயில்லை. ஆகவே மேகதாதுவில் அணை கட்டுவதை காவிரி லோண்மை ஆணையம் எந்த நிலையிலும் ஏற்றுக்ெகாள்ளக்கூடாது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.
கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் வெண்ணாற்று பாலத்தின் அருகில் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் வைகறை தலைமை தாங்கினார். இதில் பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன் மற்றும் பலர் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கல்லணை கரிகாலன் சிலை அருகில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.