ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகலில் ஆணையரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் ஆணையரை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக அவை கூடத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெறும் என உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உரிய நேரத்தில் கூட்டம் நடத்தாததால் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதை தொடர்ந்து ஒன்றியக்குழு கூட்டத்தை உரிய நேரத்தில் நடத்த தவறிய ஊராட்சி ஒன்றிய ஆணையரை கண்டித்து நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த தலா 4 உறுப்பினர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஒருவரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தை

பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஒன்றியக்குழு கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story