இளம்பெண் தற்கொலைக்கு காரணமான மினி பஸ் டிரைவர் தலைமறைவு
குளச்சல் அருகே இளம்பெண் தற்கொலை ெசய்ய காரணமான மினி பஸ் டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே இளம்பெண் தற்கொலை ெசய்ய காரணமான மினி பஸ் டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தற்கொலை
குளச்சல் அருகே உள்ள லட்சுமிபுரம் தாவூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது32). எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுஜிலா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுஜிலா நாகர்கோவில் அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை பார்த்து வந்தார். ஆனந்த் மற்றும் சுஜிலா காரியாவிளையில் உள்ள ஆனந்தின் சகோதரி வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சுஜிலா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சுஜிலா காரியாவிளையில் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கணவர் ஆனந்தின் சகோதரி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர் நாளை (புதன்கிழமை) ஊருக்கு வருகிறார். அதன்பின்பு சுஜிலா உடல் ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என ஆனந்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மினி பஸ் டிரைவர்
சுஜிலா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மினிபஸ் டிரைவர் சிபின்தான் சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் சுஜிலா இறந்த பின்பும் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. செல்போனை போலீசார் எடுத்து பேசினர். அப்போது பேசிய மினி பஸ் டிரைவர் சிபின் கோபத்தில்தான் பேசியுள்ளார்.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் சிபினிடம் விசாரணை நடத்த முயன்றனர். இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரித்தால்தான் சுஜிலா மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியும் என போலீசார் கூறினர்.
கடிதம் சிக்கியது
இதற்கிடையே சுஜிலா தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் அவர் தங்கியிருந்த வீட்டில் சிக்கியது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், மினிபஸ் டிரைவர் சிபின் ஏமாற்றியதாகவும், தனது கணவர் ஆனந்தை குறிப்பிட்டு 'ஐ மிஸ் புருஷா', எனவும், குழந்தைகள் சாக்லெட் சாப்பிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்' எனவும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் கூறும்போது, மருந்தாளுனராக வேலை பார்த்த சுஜிலா அடுத்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே மினி பஸ் டிரைவர் சிபினுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவர் இரவு வேளையிலும் சுஜிலாவுக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதை சிபின் விரும்பவில்லை. இதனால் நேரம் காலம் இல்லாமல் அவர் செல்போனில் பேசி தொல்லை கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினமும் அவரது தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற சுஜிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, தெரிவித்தனர்.
இதையடுத்து சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக சிபின் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சுஜிலா தற்கொலை வழக்கு இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு (தற்கொலை தூண்டுதல்) வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
மினி பஸ் டிரைவர் சிபினுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.