18 வயது மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி மத்திய மந்திரியிடம் அமைச்சர் கோரிக்கை
செப்டம்பர் மாதத்தில் 35½ லட்சம் டோஸ்கள் காலாவதியாவதை தடுக்க அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18 வயதுக்கு மேல் அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.
சென்னை,
கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னையில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கொசு ஒழிப்பு பணி
கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்த ஆண்டில் 2,866 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்துகள், ரத்தம் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 21 ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
17 மாவட்டங்களில் மலேரியா இல்லை
கொசுப் புகை எந்திரம் மற்றும் பூச்சுக் கொல்லிகள் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மலேரியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 140 நபர்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மலேரியா தொற்று இல்லாத நிலை உள்ளது. மலேரியா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாக சென்னை, ராமநாதபுரம், தருமபுரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை உள்ளது.
மூளைக் காய்ச்சல் தடுப்பூசி
இந்த நோயை முற்றிலும் ஒழிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளது. தமிழ்நாடு அரசு யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வழங்கி வருகிறது. இதுவரை 8,023 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். ரூ.9.63 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 13 நபர்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான தடுப்பூசி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், மதுரை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் போடப்படுகிறது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி
9 முதல் 12 மாத குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 16 முதல் 24 மாத குழந்தைகளுக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது. இந்தப் பணி 90 சதவீதத்துக்கு மேல் முடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் மழை பருவ காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, கொசுக்களின் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் தேதியின் நிலவரப்படி தமிழ்நாட்டில் 78 லட்சத்து 78 ஆயிரத்து 980 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. செப்டம்பர் மாதத்துடன் 35.52 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளது. எனவே, இந்த தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க மத்திய அரசு 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு தனியார் கொரோனா தடுப்பூசி மையத்தை தவிர்த்து அரசு கொரோனா தடுப்பூசி மையத்திலேயே இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பாபிரபாகர் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் செல்வவிநாயகம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர்-சிறப்புபணிஅலுவலர் வடிவேலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.