மணப்பாட்டில் தூண்டில் வளைவு பணியை அமைச்சர் படகில் சென்று ஆய்வு
மணப்பாட்டில் தூண்டில் வளைவு பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று படகில் சென்று ஆய்வு செய்தார்.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மணப்பாடு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தொழிலுக்கு இடையூறாக கடற்கரையில் இயற்கையான முறையில் பெரும் மணல் குன்றுகள் தோன்றின. இதனால் மீனவர்கள் கடலுக்குகள் படகுகளை கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து மீன்பிடித்தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையறிந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ராட்சத எந்திரங்கள் மூலம் மணல் குன்றுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். எனினும் மணல் குன்றுகள் உருவாகுவது குறையவில்லை. இதையடுத்து நிரந்தர தீர்வாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் தெரிவித்ததையடுத்து, நபார்டு மூலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து கடலுக்குள் தூண்டில் வளைவு அமைக்கப்படும் இடத்தை நேற்று மாலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவளத்துறை அதிகாரிகளுடன் படகில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், மீனவர்களின் மீன்பிடி தொழில் தடையின்றி நடைபெற்று அவர்களின் பொருளாதாரம் மேம்பட தூண்டில் வளைவு திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.
அப்போது மீன்வளத்துறை தலைமை பொறியாளர் ராஜ், செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, தயாநிதி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உடன்குடி யூனியன் தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.