குவாரியில் பொக்லைன் எந்திரம் மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்
குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.
குவாரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வருகின்றனர்.
குண்டு வீச்சு
சிவகங்கையை அடுத்த உடைகுளத்தில் கிராவல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் இருந்து லாரிகளில் மண்ணை ஏற்றி விடுவதற்காக மண் அள்ளும் பொக்லைன் எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தில் டிரைவர் பாலமுருகன், உதவியாளர் கண்ணன் மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர்.
அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு 4 பேர் வந்தனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை பொக்லைன் எந்திரத்தை நோக்கி வீசினர். இதில் எந்திரம் மீது பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடித்து சிதறின.
மேலும் சிதறி கிடந்த இடத்தில் தீப்பிடித்தது. இதையடுத்து எந்திரத்தின் மீது அமர்ந்து இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? எதற்காக வீசி சென்றார்கள், எந்திரத்தின் மீது அமர்ந்து இருந்தவர்களை குறிவைத்து வீசினார்களா? என்ற கோணத்தில் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.