விழுப்புரத்தில்டூடோரியல் சென்டரின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் டூடோரியல் சென்டரின் கதவை உடைத்து ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் தனியார் டுடோரியல் சென்டர் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்த கல்வி நிறுவனத்தில் வகுப்புகள் முடிந்து மாணவ- மாணவிகள் சென்றதும் டுடோரியல் சென்டரை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் அதன் ஊழியர்கள், நேற்று காலையில் வந்து பார்த்தபோது டுடோரியல் சென்டரின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது அலுவலக அறையின் கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 1 கிராம் தங்க நாணயம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் தங்க நாணயத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து டுடோரியல் சென்டரின் உரிமையாளர் குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.